மணிப்பூர் கலவரத்திற்கு பொருப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் பேட்டியளித்துள்ளார்.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயற்குழு கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், தமிழ்நாடு மாநில துணைத்தலைவர்கள் அபிஷேக் நவீன் மாநில பொதுச் செயலாளர்கள் தினேஷ், சரவணன், சிந்துஜா, கிருத்திகா, மாவட்ட தலைவர்கள் டைசன், தனசேகர், உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் லெனின் பிரசாத், "மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் பிரதமருக்கு அதைப் பற்றிய கவலை இல்லை கலவரம் நடைபெற்று வரும் மாநிலத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாமல் உள்துறை அமைச்சர் டெல்லியில் அனைத்து கட்சி கூட்டத்தை சம்பிரதாயத்திற்காக நடத்தியுள்ளார். மணிப்பூர் கலவரத்திற்கு தார்மீக பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். மணிப்பூர் மாநிலம் இந்திய வரைபடத்தில் தான் இருக்கின்றது என்பதை ஒருபோதும் பிரதமர் மறந்துவிட வேண்டாம். மணிப்பூர் மாநில கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்" என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஏராளமான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் இருப்பதாகவும், இதற்கு தமிழக ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் ஊர் ஊராக சென்று தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிப்பதும் அவருக்கு தெரிந்த அரசியல் செய்வதும் உள்ளிட்ட வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரித்த அவர், தமிழக மாணவர்களின் வாழ்வை பாதிக்கும் ஆளுநரின் இந்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து ஒரு சில சமூக விரோதிகள் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் விதத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் இன்றுவரை அந்த சமூக விரோதி கைது செய்யப்படவில்லை என தெரிவித்த அவர், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா? என்ற சந்தேகம் எங்களுக்கு எழுவதாகவும் காவல்துறையினர் ஒருதலைபட்சமாகவே நடந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.