இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழித் தேர்வு கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்ஐடி உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத அலுவலர் நியமன தேர்வுகளில் இந்தி மொழித் தேர்வை கட்டாயம் ஆக்குகிற அறிக்கையை தேசிய தேர்வு முகமை கடந்த 17-ம் தேதி அன்று வெளியிட்டது கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : ”நான் கேட்டேன்;அவர் கொடுத்துட்டார்” ரஜினி கூலிங் கிளாஸை பரிசளித்ததால் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ஜாஃபர்!
இந்த அறிவிப்பு, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள மாபெரும் அநீதி என்று கூறியவர், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள தேர்வு பாட முறையை மாற்றி அமைக்குமாறு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.