தமிழ்நாடு

மதுவை, பாட்டிலில் விற்கும் பொழுது, ஆவின் பாலை விற்க முடியாதா?..உயர் நீதிமன்றம் சராமாரி கேள்வி!!

Malaimurasu Seithigal TV

அரசு டாஸ்மாக்கடைகளில் மதுபானங்களை பாட்டிலில் விற்கும் போது ஆவின் பாலை ஏன் பாட்டிலில் அடைத்து விற்க முடியாது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகள் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும் எனவும், ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? எனவும் அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு  நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆவின் நிறுவனம் தரப்பில், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா? என்று மக்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும், அதற்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டது.

ஆவின் நிறுவனத்தின் அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த  நீதிபதிகள், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை பாட்டிலில் விற்கும் போது, ஆவின் பாலை ஏன் பாட்டிலில் அடைத்து விற்க முடியாது? எனவும், மதுபோதையில் பாட்டிலை கவனமாக கையாளும் போது, சுயநினைவுடன் இருக்கும்  மக்களால் கண்ணாடி பாட்டிலை கையாள முடியாதா?எனவும் சரமாாியாக கேள்வி எழுப்பினர்.

மேலும் இது தொடா்பாக மீண்டும் ஆலோசனை நடத்தி, புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.