தமிழ்நாடு

“ விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும், அதற்கு புனிதம் கூடி விடாது ” - உயர்நீதிமன்றம்

Malaimurasu Seithigal TV

விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வது குறித்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கோவையில் உள்ள தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம், தனது விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்யக் கூடாது என பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிடக் கோரி பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், திருமணம் நடந்து, அதை பதிவு செய்யாவிட்டாலும், அது செல்லத்தக்கது தான் எனவும், அந்த திருமணத்தை நீதிமன்ற உத்தரவு மூலமாகத் தான் ரத்து செய்ய முடியும் என்பதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும், அதற்கு புனிதம் கூடி விடாது எனத் தெரிவித்த நீதிபதி, திருமணத்தை செல்லாது என அறிவிக்க கோரி உரிமையியல் நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார்.