தமிழ்நாடு

தேர்தல் வழக்கில் ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

Malaimurasu Seithigal TV

தேனி மக்களவை தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொது தேர்தலில், தேனி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76 ஆயிரத்து 319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிப் பெற்றார். 

இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்ற போது, மூன்று நாட்கள் நேரில் ஆஜரான ரவீந்திரநாத் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். அவரை தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக சில விவரங்களை இரவீந்திரநாத்திடம் நீதிபதி கோரியிருந்தார். இந்த வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே தங்களது தரப்பு ஆவணங்களை சமர்பிக்க முடியும் என்பதால் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென ரவீந்திர நாத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு ஒப்புக்கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் ரவீந்திர நாத் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.