தமிழ்நாடு

சாந்தன் முருகன் மனுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை.!

Malaimurasu Seithigal TV

இலங்கைக்கு அனுப்பக்கோரி சாந்தன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், 
'இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது  75 வயதான தாய் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், அவரை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோரி செப்டம்பர் 11-ம் தேதி மத்திய அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை', எனவும் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வு, இரண்டு வாரங்களில் மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய முருகன் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பதற்காக திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் சென்றுவர அனுமதி கோரி நளினி தாக்கல் செய்த மனுவுக்கு அக்டோபர் 30- ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்ததவிட்டுள்ளது.