தமிழ்நாடு

சுற்றுலா பயணிகள் வருகையை முறைப்படுத்த உயர்நீதிமன்றம் யோசனை!

Malaimurasu Seithigal TV

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வருகையை முறைப்படுத்த  ஆன்லைன் பதிவு முறையை அமல்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்தரன், நீலகிரி மாவட்டத்தில், சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும்,  அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார். 

அப்போது நீதிபதிகள்,  ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களை அனுமதிப்பதால் , உள்ளூர் மக்கள் அவசர மருத்துவ தேவைக்கு கூட வெளியே வர முடியவில்லை என தெரிவித்தனர்.

ஊட்டியில் சுற்றுலா மட்டுமல்லாமல், தேயிலை தோட்டம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள்,  போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகள் வருகையை முறைப்படுத்த ஆன்லைன் பதிவு முறையை அமல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஊட்டி சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலை துண்டிக்கபட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு குறித்து விளக்கமளிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விரிவாக்க பணி தொடர்பாக பெறப்பட்ட ஒப்புதல்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.