தமிழ்நாடு

27 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதம் நடந்த அதிசயம்...!

Tamil Selvi Selvakumar

சென்னையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்த தொடர் கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே ஈக்காட்டுத் தாங்கலில் சாலையோரம் இருந்த ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் ராதா கிருஷ்ணன் சாலையிலும் ராட்சத மரம் விழுந்த நிலையில், அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல் கத்திப்பாரா தரைப்பாலத்தை சூழ்ந்த வெள்ளநீரால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் பெரம்பூர், ரயில்வே சுரங்க  பாதையில் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி கொண்ட நிலையில் அதனை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலையில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை எனவும், முன்னெச்சரிக்கையாக 250 மோட்டார் பம்புகள் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, நுங்கம்பாக்கம், தியாகராய நகர் துரைசாமி ஆகிய சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமீரன் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நள்ளிரவு முதல் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 14 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தமிழ்நாடு, கேரளா மற்றும் ராயல் சீமாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.