தமிழ்நாடு

நேற்று மாலை முதல் இடைவிடாத கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குமரி மாவட்டம்...

Malaimurasu Seithigal TV

நேற்று மாலை முதல் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை, இடைவிடாது கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து, அவற்றில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் குளங்கள் உடைந்து, அதைகளவிலான மழைநீர் வெளியேறி வருகிறது.

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும் வீடுகளுக்குள் நீர் புகுந்து, முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. நாகர்கோவில்,புத்தேரி அரும நல்லூர், அஞ்சுகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் 6500 ஹெக்டேர் விவசாய பயிர்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான விளைநிலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பலத்த சூறைக் காற்றுடன் வெளுத்து வாங்கிய மழையால், மாவட்டத்தில் உள்ள மின் கம்பங்கள் மட்டுமின்றி, மிகப்பெரிய அளவிலான ராட்சத மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. இந்நிலையில், ஆங்காங்கே சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை ஜே.சி.பி. இயந்திரம்  கொண்டு அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இதுமட்டுமின்றி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மேசமான நிலையில் உள்ள 25 சதவீத வீடுகள் மழைக்கு தாக்குபிடிக்கமால் இடிந்துள்ளது.மழையால் எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாகவே காட்சியளுக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்கள், அரசு உரிய நிவாரணம் வழங்கி உதவ வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்