தமிழ்நாடு

சென்னையில் கனமழை; முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு!

Malaimurasu Seithigal TV

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்த தொடர் கனமழையால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல ராதா கிருஷ்ணன் சாலையிலும் ராட்சத மரம் விழுந்த நிலையில் அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும், கத்திப்பாரா தரைப்பாலத்தை சூழ்ந்த வெள்ள நீரால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் பெரம்பூர், ரயில்வே சுரங்க  பாதையில் தேங்கிய மழைநீரில் கார் சிக்கி கொண்ட நிலையில் அதனை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக சாலையில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்கவில்லை எனவும், முன்னெச்சரிக்கையாக 250 மோட்டார் பம்புகள் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி பொறுப்பு ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார். 

மேலும் நுங்கம்பாக்கம், தியாகராய நகர் துரைசாமி ஆகிய  சுரங்கபாதையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமீரன் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நள்ளிரவு முதல் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 14 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தமிழ்நாடு, கேரளா மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.