தமிழ்நாடு

வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜராகும் செந்தில் பாலாஜி...!

Tamil Selvi Selvakumar

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு  உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி காணொளி வாயிலாக விசாரணை மேற்கொள்ளவுள்ளார். 

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் தொடந்து 8 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில், நேற்றைய முன் தினம் அமலாக்கத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

அப்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக் குழாய்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டது. தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவர்களின் அறிக்கை, அமலாக்கத்துறையினரின் உத்தரவின் பேரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்டுள்ள நீதிமன்ற காவலை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ஏற்கனவே 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளதால் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்திலாபாலாஜி காணொளி வாயிலாக ஆஜாராகவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும், அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணையில் கேட்டறியவுள்ளதாக கூறப்படுகிறது.