தமிழ்நாடு

தமிழகத்திற்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி... மத்திய அமைச்சருக்கு மா.சுப்பிரமணியன் கடிதம்...

12ஆம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமிற்கு தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி மட்டுமே இதற்கு ஒரே தீர்வாக பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இதுவரையும் 3.59 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 44 சதவீதமும், இரண்டாம் தவணைத் தொகை 15 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் தேதி ஒரே நாளில் 10,000 தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் தடுப்பூசிகள் போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தமிழக - கேரள எல்லை பகுதியான கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திண்டுக்கல், தென்காசி, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 100 சதவிகிதம் தடுப்பூசி போட கூடுதல் தடுப்பூசி முகாம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.