தமிழ்நாடு

சி.பி.எம் பேரணி; டிஜிபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Malaimurasu Seithigal TV

மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்து பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்துள்ள வழக்கில் தமிழக டிஜிபி நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 60வது ஆண்டை முன்னிட்டு, மத்திய அரசின் மதவாத கொள்கைகளை கண்டித்தும்,   மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை கண்டித்தும் தமிழகம் முழுவதும்  அக்டோபர் 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரச்சார பயணங்கள், பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக டிஜிபி-க்கு அக்டோபர் 10ம் தேதி மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்து, பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத் மற்றும் ஆர்.திருமூர்த்தி ஆகியோர் ஆஜராகி, பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் அளிக்காத வகையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், தங்கள் கட்சி சார்பில் நடத்தக்கூடிய நிகழ்வுகளில் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை என்றும் தெரிவித்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியை காரணம் காட்டி, தங்கள் பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுக்க வாய்ப்புள்ளதால், வழக்கு தொடர்ந்துள்ளதாக வாதிட்டனர். 

இதையடுத்து வழக்கு தமிழக டிஜிபி விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நாளை (அக்டோபர் 20) தள்ளிவைத்துள்ளார்.