தமிழ்நாடு

கோயில் நிலம் ஆக்கிரமிப்பை...உடனடியாக அகற்ற வேண்டும்...தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Tamil Selvi Selvakumar

தருமபுரி மாவட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் அதனை உடனடியாக அகற்ற வேண்டுமென அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்த பழனிவேல் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 1928 ஆம் ஆண்டு பாப்பாரப்பட்டியில் உள்ள  சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி 2014ல் இந்து சமய அறநிலைய துறை மற்றும் தமிழக முதலைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கோவில் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருவதால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வழக்கு தொடரப்பட்டது. 

இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் அளித்த கோரிக்கை மனு மீது விசாரணை நடத்தவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய வாய்ப்பளித்து 12 வாரங்களில் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும், அதேசமயம் அந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.