ஆளுநர் ஆளுநராக இருக்க வேண்டும் என திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி பிக்பாஸ் பிரபலங்கள் அமீர் இயக்கத்தில், பாவனி ரெட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை மற்றும் செய்தியாளர் சந்திப்பானது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தாகூர் ஃபிலிம் சென்டரில் நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்வில் நடிகர் மன்சூர் அலிகான், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் பல்வேறு திரைப் பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது "ஆளுநர் ஆளுநராக இருக்க வேண்டும்; ஆளுநர் அதிகார வர்க்கமாக இருக்கக் கூடாது. ஆளுநர் மாளிகை முன்னே சென்று பாருங்கள். ஒரு தீவிரவாதியை அடைத்து வைத்திருப்பது போல் 100 தடுப்புகளை வெளியில் போட்டு, 1000 காவலர்களை நிறுத்தி வைத்திருப்பார்கள். இது போன்றெல்லாம் கடந்த காலங்களில் கிடையாது" என தெரிவித்திருந்தார்.
மேலும் "ஆளுநர் மாளிகை உள்ளே ராஜபோக வாழ்க்கை வாழ்கின்றனர். ஆளுநருக்கு எதற்கு அவ்வளவு ஏக்கர் நிலம்? சாதாரண மக்கள் இன்னும் முன்னேறாமல் இருக்கின்ற நிலையில் எதற்கு 650 ஏக்கரில் ஆளுநருக்கு இடம்? அங்கு எதற்கு அவ்வளவு பெரிய மாளிகை? விளையாட்டு மைதானங்கள் இல்லாமல் வீரர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆளுநர் மாளிகையில் 10 விளையாட்டு மைதானங்களை கட்டலாம். இதையெல்லாம் கூறி 1998ல் போராட்டம் நடத்தினேன். என்னை கைது செய்து 35 நாட்கள் சிறையில் அடைத்து விட்டார்கள்" என்றார்
மேலும் ஆளுநர் தேவையில்லாத வேலைகளை செய்வதாகவும் தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பதவியே தேவையில்லை எனவும் கருத்து தெரிவித்திருக்கிறார்