தமிழ்நாடு

"இந்த வாழ்வு அடுத்தவர்களுக்கு சேவை செய்யவே" ஆளுநர் ஆர்.என்.ரவி!

Malaimurasu Seithigal TV

இந்த வாழ்வு அடுத்தவர்களுக்கு சேவை செய்யவே என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.  

பகவான் மகாவீர் அறக்கட்டளை சார்பில் சமூக சேவை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் தனிநபர்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்காக 26-ஆவது விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த ஆண்டு டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் தியான் அறக்கட்டளை, பழங்குடி சமூகத்தின் நண்பர்கள் உள்ளிட்ட நான்கு அறக்கட்டளைகளுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் விருதுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.ரவி உரையாற்றினார்.

 அப்போது அவர் பேசுகையில், பகவான் மகாவீர் அறக்கட்டளைக்கு எனது வாழ்த்துக்கள். அதே போன்று விருது பெற்ற தியான் அறக்கட்டளைக்கு பாராட்டுகள். விலங்குகளுக்கு உணவளிப்பது என்பது நல்ல விஷயம். மேலும் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்ட கால்நடைகளை மீட்டு அவற்றுக்கு சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட சேவை சிறந்தது. நீங்கள் இந்த சமூகத்துக்கு நல்ல சேவையை வழங்கி வருகிறீர்கள். இந்த சமூகத்தில் உதவுவது என்பது நம் கலாச்சாரத்தில் உள்ளது. மக்களுக்கு தேவையான முழுமையான உதவிகளை அரசு வழங்க இயலாது. சனாதான தியாந்தாவில் அனைவரும் ஒன்று. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர். 

நாம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வள்ளலாரின் 200-வது பிறந்த நாளை கொண்டாடினோம். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" என வள்ளலார் கூறிய வரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்றைய உலகம் பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கிறது. இந்த உலகில் நாம் அனைவரும் ஒன்று என்பதை வெளிக்காட்டும் வகையில் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாடு வெளிக்காட்டியது. வசுதேவ குடும்பம் - உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற பெயரில் நடைபெற்றது. இதில் மனிதர்கள் மட்டும் இன்றி விலங்குகள் உள்ளிட்ட அனைத்து ஜீவ ராசிகளும் அடங்கும். இந்த வாழ்வு அடுத்தவர்களுக்கு சேவை செய்யவே. எதிர்காலத்துக்காக அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் நம் அரசு ஈடுபடுகிறது என்றார்.