ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியரான கதிஜா உமாமா தனது மூன்றாவது பிரசவத்திற்காக ஓராண்டு காலத்திற்கு விடுப்பு கோரி விண்ணப்பித்தார். அந்த விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே விடுப்பு வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பணியில் சேர்வதற்கு முன்பாகவே இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும், பணியில் சேர்ந்த பின்னரே மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றதால் விடுப்பு பெற உரிமை உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கதீஜாவின் விண்ணப்பத்தை பரிசீலித்து ஜூலை 7ம் தேதி முதல் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.