காற்று மாசுபாட்டின் சூழலியல் சிக்கல்களை தீர்க்க அரசுப் பேருந்துகள் சேவையை இலவசமாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில், ஜி20 நாடுகள் மாநாடு மற்றும் COP 28 ஐநா காலநிலை மாநாட்டில் உறுதியான காலநிலை நடவடிக்கை எடுக்க கோரி விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் நடைபெற்ற பேரணியை பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தொடங்கி வைத்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, கால நிலை மாறிவருவதால் பேரழிவு வந்து விடுமோ என்ற பயம் தங்களுக்கு இருக்கிறது என்றார். ஜி 20 மாநாட்டுக்கு ஒரு அழுத்தம் கொடுக்கும் வகையில் பசுமைதாயகம் சார்பில் பேரணி நடத்துவதாக அன்புமணி தெரிவித்தார்.
கார்பன் உமிழ்வை குறைப்போமென்று நாடுகள் உறுதியளித்திருக்கிற போதும், பெரிதான நடவடிக்கைகளோ மாற்றங்களோ இல்லை என வேதனை தெரிவித்த அன்புமணி, ஆயிரக்கணக்கான மக்கள் வெப்பதாலேயே உயிர் இழக்கும் நிலை இருக்கிறது என்றார். மேலும் சுற்றுச்சூழல் பிரச்சனையைக் கையிலெடுத்து போராட இளைஞர்கள் முன்வரவேண்டும் என அன்புமணி அழைப்பு விடுத்திருக்கிறார்.
மின்சாரம் அல்லாத பயன்பாட்டு வாகனங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அன்புமணி, அரசுப் பேருந்துகள் அனைத்தையும் இலவசமாக்கினால் காற்று மாசு சூழலியல் சிக்கல்களை தீர்க்க முடியும் என்றார். இந்த பேரணியில் பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் சௌமியா அன்புமணி, பாமக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.