ஊட்டி: ரம்மியமாக காட்சியளிக்கும் முதுமலை புலிகள் காப்பகத்தில், இயற்கையுடன் சேர்த்து விலங்குகளையும் கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள், காட்டெருமைகள், புலிகள், சிறுத்தைகள், கரடிகள், மான்கள் போன்ற விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் பெய்த கோடை மழையால்புலிகள் காப்பகம் முழுவதும் பச்சை பசேலன காட்சியளிக்கிறது.
இதனால் குட்டிகளுடன் யானைகள் கர்நாடக மற்றும் கேரளா வனப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து முதுமலை வந்துள்ளது. அதே போல் காட்டெருமைகள் குட்டிகளுடன் உலா வரத் துவங்கி உள்ளது. இந்தியாவில், அழிவின் பட்டியலில் இருந்த செந்நாய்கள் எண்ணிக்கை, தற்போது முதுமலை புலிகள் காப்பகத்தில் அதிகரித்திருக்கிறது. இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சுற்றுலா பயணிகள் வாகன சவாரி மூலம் முதுமலைக்குள் வனவிலங்குகளை கண்டு ரசிக்க அழைத்துச் சென்றபோது செந்நாய் கூட்டம் ஒன்று 200க்கும் மேற்பட்ட புள்ளிமான்களை விரட்டிச் சென்ற காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
அதேபோல் கரடி ஒன்று வனப்பகுதிக்கு ஒய்யாரமாக நடந்துச்சென்று மோட்டார் இயந்திரம் வைத்துள்ள அறையின் கதவின் மீது நின்று சுற்றுலாப் பயணிகளுக்கு போஸ் கொடுக்கும் வகையில் சிறிது நேரம் விளையாடி ஒய்யாரமாக தேன் எடுக்க சென்ற காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
இதேபோல் நீர் நிலைகள் அருகே ஓய்வெடுத்த கடா மான்களையும், சிங்கவால் குரங்கு போன்ற வனவிலங்குகளையும் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி மூலம் கண்டு ரசித்தனர்.
தமிழ்நாடு வனத்துறை சார்பில் வனப்பகுதிகளில் ஆக்கிரமித்து இருந்த அந்நிய நாட்டு தாவரமான பார்த்தீனியம் என்ற களைச்செடிகளை வனத்துறையினர் வெட்டி அகற்றியதால் தற்போது வனவிலங்குகளுக்கு தேவையான புற்கள் மற்றும் தாவரங்கள் அதிக அளவு வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: "மோடிக்கும் பயப்பட மாட்டோம், ED க்கும் பயப்பட மாட்டோம்": விளையாட்டுத் துறை அமைச்சர் பேச்சு!