சமூக நீதியும், பெண் விடுதலைக்கான போராளியாக உதயநிதிஸ்டாலின் இருப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் தனியார் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரின் 70 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு “பெண்ணுரிமைகாத்த போராளி”என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தமிழ்நாடுக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி “ஒரு காலத்தில் பெண்களை வீட்டைவிட்டு வெளியில் விடமுடியாமல் இருந்தது சமுதாயம். ஆனால் இன்றைக்கு பெண்கள் வீட்டைவிட்டு வெளியில் வருகின்றனர். இந்த சுதந்திரத்திற்காகவும், பெண் விடுதலைக்காக முதன்முதலில் குரல் கொடுத்த தந்தை பெரியார் காலத்தில் இருந்து பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் இன்றைக்கு அவர்களின் மொத்த உருவாக இருக்கக்கூடிய தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளைத்தான் நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். திடீர் என்று அவர் அந்த இடத்தில் வந்து அமரவில்லை.” எனக் கூறினார்.
மேலும், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களாலேயே ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற அங்கீகாரத்தைப்பெற்றுதான் முதலமைச்சர் என்ற அரியணையில் அமர்ந்துள்ளார். பெண்களை ஆசிரியராகவும், மருத்துவராகவும் மட்டும் அனுப்பிவைக்காதீர்கள். காவல்துறைக்கும், ராணுவத்திற்கும் அனுப்பிவைக்கவேண்டும் என குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். 1973 ம் ஆண்டு மகளிரை காவல்துறையில் பணியமர்த்திவர் கலைஞர்தான். அந்த மகளிர்களுக்கான நூற்றாண்டு பொன்விழா ஆண்டுதான் இந்த ஆண்டு.” எனப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் “முதலில் தொடங்கியவர் கலைஞர்தான் என்பதை சொல்லாமல் சொன்னார். ஒன்றில் இருந்து நான் தொடங்குகிறேன், நூறில் இருந்து எனது மகன் ஸ்டாலின் தொடங்குவார் என்றார். கவலைப்பட வேண்டாம் 200ல் இருந்து எங்களது உதயநிதி அதனை தொடர்ந்து நடத்துவார். சமூக நீதியும், பெண் விடுதலைக்காகவும் போராடக்கூடிய போராளியாகவும் இருப்பார். ” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திமுக மூத்த முன்னோடிகள் 15 பேருக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டன. திமுக நிர்வாகிகள், திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: நடிகர் வடிவேலுவை காண திரண்ட கூட்டம்....!!