தமிழ்நாடு

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ஐ.டி. ரெய்டு...!

Tamil Selvi Selvakumar

திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். 

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறையில் ஒப்பந்தங்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், ஆதாய நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் அமைச்சர் எ.வ. வேலு மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தகவல்களை திரட்டி ஆய்வு மேற்கொண்டு, வரிஏய்ப்பு செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக தெரியவந்த நிலையில், அமைச்சருக்கு தொடர்புடைய இடங்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் உட்பட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் இரவு வரை விடிய விடிய சோதனை நடத்தினர். 

இந்நிலையில் தென்மாத்தூர் பகுதியில் அமைந்துள்ள அருணை பொறியியல் கல்லூரி, அருணை மருத்துவக் கல்லூரி, கரண் கலைக்கல்லூரி மற்றும் அமைச்சரின் வீடு, அலுவலகங்கள்  உள்ளிட்ட  இடங்களில் 120-க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டுள்ளனர்.