தமிழ்நாடு

கூடுதல் தண்ணீர் வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்...!காவல்துறை - விவசாயி இடையே தள்ளுமுள்ளு!

Tamil Selvi Selvakumar

கண்ணடியன் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, விவசாயிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களின் பிரதான அணைகளான பாபநாசம் காரையார் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் திறக்கப்படும் தண்ணீர், கண்ணாடியன் கால்வாய் மூலம் சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல் உள்ளிட்ட கிராமங்களை சென்றடைகிறது. இதன்மூலம் சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் தாமதாக திறக்கப்பட்ட நிலையில், தற்போது கண்ணடியன் கால்வாயில் நீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கண்ணடியன் கால்வாயில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் 200-க்கும் மேற்பட்டோர் சேரன்மகாதேவி பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.