தமிழ்நாடு

தமிழகமெங்கும் பரவலாக மழை; விவசாயிகள் மகிழ்ச்சி!

Malaimurasu Seithigal TV

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழையினால், பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் படி  சென்னையின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இரவு முதல் விடிய விடிய பெய்த மழை காரணமாக, மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தலைமையில் சென்னையில் மழை நீர் தேங்க கூடிய பகுதிகளில் நள்ளிரவு முதல் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கொளத்தூர், திரு வி க நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்காமல் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், சுரங்கப்பாதை அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருப்பதற்காக மாநகராட்சி ஊழியர்கள் உடனுக்குடன் மழை நீரை அகற்றும் பணியை மேற்கொண்டு வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.  செவிலிமேடு, ஓரிக்கை, வாலாஜாபாத், உத்தரமேரூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல்,  தென்காசியில் இன்று 2வது நாளாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. செங்கோட்டை, ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால், சாலைகளில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படியே சென்றன. தென்காசி மற்றும் சுற்றுப் பகுதிகளில் திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நீர் பிடிப்பு பகுதிகளான குளங்கள் மற்றும் கண்மாய்களுக்கு நீர்வரத் துவங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோட்டில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த மழையால், பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், தமிழக-கேரள எல்லைப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மலைப்பகுதிகளில் ஆங்காங்கே அளவுக்கு அதிகமான தண்ணீர் வழிந்தோடி வருகிறது.  இந்த நிலையில், தென்மலை - எடமன் ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அதிக கன மழையின் காரணமாக மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில், அப்பொழுது அந்த வழியாக குருவாயூர்- மதுரை விரைவு ரயிலின் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு சற்று முன்னதாகவே ரயிலை நிறுத்தினார்.

இது தொடர்ந்து, ஊழியர்கள் உதவியுடன் தண்டவாளத்தில் சரிந்து விழுந்த பாறை கற்கள் மற்றும் மண்ணை ரயில்வே அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.  இதனால், அப்பகுதியில், சில மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.