தமிழ்நாடு

வெளுத்து வாங்கிய கனமழை...இடி தாக்கி விவசாயி உயிரிழப்பு...!

Tamil Selvi Selvakumar

வடகிழக்குப் பருவமழையால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. 

தென் தமிழகம்  மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், சுரண்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

இதேபோல், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. காலை முதல் வெயில் நிலவி வந்த நிலையில் மதிய நேரத்தில் காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை வெளுத்து வாங்கியது. பேருந்து நிலையம், ரயில்வே சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளானார்கள். 

இதனிடையே, காஞ்சிபுரம் அடுத்த கரூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர், வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது இடி தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு காந்திநகரில் உள்ள ஒரு வீட்டின் மேல் இடி தாக்கியதில் தண்ணீர் தொட்டி சேதமடைந்தது.