தமிழ்நாடு

அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும்..... எச்சரிக்கை விடுத்த ஆர்எஸ்எஸ்

Malaimurasu Seithigal TV

வரும் மார்ச் 5ஆம் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த அனுமதி அளிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் என தமிழக டிஜிபி-க்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டுமென்ற உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த வழக்குகளை விசாரித்த  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, பிப்ரவரி 10ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ததுடன், மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல்துறையிடம் விண்ணப்பிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்து, பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விண்ணப்பித்திருந்தனர்.

ஆனால் அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி இன்று ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அளித்த விண்ணப்பத்தை ஏற்று, மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்கும்படியும், அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.