தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட அரசாணை இன்றுடன் காலாவதியாகுமா? தமிழக அரசு செய்ய போவது என்ன?

Tamil Selvi Selvakumar

ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அரசாணை இன்று காலவதியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஆன்லைன் தடை மசோதா:

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்வது, முறைப்படுத்துவது குறித்த சட்ட மசோதா கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

கேள்வி எழுப்பிய ஆளுநர்:

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதாவில் ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது  தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா? என்றும், இதற்கு முன்பாக கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு நீதிமன்றம் அளித்த சில கேள்விகளையும் ஆளுநர் எழுப்பி உள்ளார்.

விளக்கம் அளித்த சட்டத்துறை:

இது தொடர்பாகவே சட்டத்துறை உரிய விளக்கத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்நாடு அரசு விளக்கம் கொடுத்திருக்கக் கூடிய நிலையில் ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலாவதியாகும் நிலை:

ஆனால், மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால் ஆறு மாதங்களுக்குள்ளும், சட்ட மசோதாவிற்கு ஆறு வார காலத்திற்குள்ளும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும், அப்படி இல்லையென்றால் காலாவதியாகிவிடும் என்பது நடைமுறை. இந்நிலையில், ஆன்லைன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு 6 வார காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் கிடைக்காததால் இன்றுடன் அரசாணை காலாவதியாகலாம் என தகவல் கூறப்படுகிறது. இதனால் அவசர சட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.