ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் தொடங்கி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதையடுத்து, கடந்த 27 ஆம் தேதி 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால், பல்வேறு இடங்களில் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
எனவே மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ராஜாஜிபுரம் பகுதியில் காத்திருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழக்கப்பட்டு, இரவு வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 945 வாக்குகள் பதிவாகியுள்ளன எனவும் வாக்குப்பதிவு 74.
79 சதவீதம் என ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் க.சிவக்குமார் அறிவித்தார்.
பின்னா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணித்து வந்தனா்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 க்கு நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டு 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மாலை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.