இளைஞர்களின் அரசு வேலை கனவுக்கு மூடுவிழா காணும் தமிழக அரசின் அரசாணை 115 -ஐ திரும்ப பெற வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அரசாணை 115:
தமிழக அரசுப் பணிகளுக்கான ஆள் தேர்வு மற்றும் பயிற்சிகளில் மாற்றங்களை செய்தல், நிரந்தர பணியாளர்களை நியமிக்காமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து குத்தகை முறையில் பணியாளர்களை பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தான் அரசாணை 115 ன் கீழ் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.
ஏஜென்சிகள் மூலம் பணியாளர்கள் நியமிப்பு:
இந்த அரசாணை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் ஆகியவற்றில் ஏஜென்சிகள் மூலமாக பணியாளர்கள் நிரப்பப்படும் என அரசாணை 115 ல் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
அரசு வேலைகளுக்கு மூடுவிழா காணும் தமிழக அரசு:
ஏஜென்சிகள் அரசு வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதன் மூலம் 69 சதவீத இட ஒதுக்கீடுக்கு மூடுவிழா காண தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தனியார் நிறுவனங்களை கொண்டு, 69 சதவீத இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசாணை 115 ஐ திரும்பபெற வேண்டும்:
இளைஞர்களின் அரசு வேலை கனவை சீரழிக்கும் அரசாணை 115 ஐ திரும்ப பெறாவிட்டால், அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி எச்சரித்துள்ளார். தொடர்ந்து, அரசாணையால் பாதிக்கப்படும் படித்த இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு அதிமுக துணை நிற்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.