பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறிய பிறகு அதிமுகவிற்கு சிறுபான்மையினர் ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,சேலத்தில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆயிரம் பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த விழாவில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை திமுக உருவாக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். 30 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது சிறுபான்மையினருக்கு ஒரு சிறு பாதிப்பு கூட இல்லை என்று கூறினார். இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக ஆடச்ியில் செய்த நலத்திட்டங்களை ஈபிஎஸ் பட்டியலிட்டார்.
கூட்டணி வேறு கொள்கை வேறு என்று கூறிய அவர், பாஜக கூட்டணியில் அதிமுக வெளியேறிவிட்டதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அச்சத்தில் இருப்பதாக விமர்சித்தார். திமுக அமைத்துள்ள இந்தியா கூட்டணியால் தமிழ்நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என்றார் ஈபிஎஸ்...காவிரியில் தண்ணீர் பெற்று தர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் போதை பொருள் கலாச்சாரம் பெருகி விட்டதாகவும் ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். நாள் தோறும் கொலை கொள்ளை அரங்கேறுவதால் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் சாடினார்.