தமிழ்நாடு

திருச்சி சென்ற முதலமைச்சர்...கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த சிறுமி...உறுதியளித்த ஆட்சியர்!

Tamil Selvi Selvakumar

திருச்சி மற்றும் தஞ்சாவூரில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார். 

டெல்டா பாசன விவசாயத்திற்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில், முன்னதாக நீர்நிலைகளை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மற்றும் திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.என் நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்பட தொண்டர்கள் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே தஞ்சாவூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் 4 இடங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

முன்னதாக, திருச்சி விமான நிலையத்தின் வெளியே நின்றிருந்த சிறுமி ஒருவர் படிப்பிற்கு உதவுமாறு கண்ணீர் மல்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். பின்னர் அச்சிறுமியின் தாயாரிடம் கோரிக்கை மனுவை பெற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர், படிப்பிற்கு தேவையான உதவி செய்யப்படும் என உறுதியளித்தார்.