தமிழ்நாடு

செந்தில் பாலாஜி அலுவலகத்திற்கு அமலாக்கதுறை நோட்டீஸ்!

Malaimurasu Seithigal TV

கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் அலுவலகமான அஃபெக்ஸில் அமலாக்கத்துறை நோட்டீஸ் ஒட்டிச் சென்றுள்ளனர்.

2011-2016 ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கு தொடர்பாக அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சரும் தற்போதைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்  ஆயத்தீர்வைத் துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்

இதில் நேற்று காலை 8 மணி முதல் கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு, ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய  இந்த சோதனையானது இரவு 10 மணி வரை நடந்தது. 12 மணி நேர அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரது அலுவலகமான அஃபெக்ஸில் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர்.

இதில், அமலாக்கத்துறை அனுமதி இன்றி இந்த அலுவலகத்தை திறக்க கூடாது எனவும் சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.