தமிழ்நாடு

83 வேட்பு மனுக்கள்...6 பேர் வாபஸ்...இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Tamil Selvi Selvakumar

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 6 பேர் வாபஸ் பெற்றதால், இறுதியில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவுள்ளது. களத்தில், திமுக , அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 83 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த நிலையில், அமமுக வேட்பாளர் உள்பட 6 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இந்த நிலையில், 77 வேட்பாளர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அதிகாரி சிவக்குமார் வெளியிட்டார். 

அப்போது, திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரசின் இளங்கோவனுக்கு கை சின்னமும், அதிமுகவின் தென்னரசுவுக்கு இரட்டை இலை சின்னமும்,  தேமுதிக வேட்பாளர் ஆனந்திற்கு முரசு சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு விவசாயி சின்னமும், மீதமுள்ள 73 வேட்பாளர்களுக்கு சுயேட்சை சின்னத்தையும் ஒதுக்கீடு செய்தார். தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு வேண்டிய சின்னத்தை ஒதுக்குமாறு கேட்டு, தேர்தல் அதிகாரி சிவக்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

77 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா என, 78 பெயர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.