பாஜக நாளை நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024 மக்களவைக்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தலில் வெற்றி பெற அனைத்துக்கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன. ஒரு புறம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் பாஜகவை வீழ்த்த பல்வேறு எதிர்கட்சிகளையும் ஒன்று திரட்டி கூட்டணி அமைத்து வருகிறது. அதே நேரத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கூட்டணி போராடி வருகிறது.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதற்காக டெல்லியில் நாளை கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை பாஜக நடத்துகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவுள்ளாா். இதற்காக அவர் நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.