கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில் வளையமாதேவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்துக்கான பணியை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முன் தினம் காலை தொடங்கியது. சோத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும் என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து வருகின்றனர்.
இதற்கிடையே பாமகவினர் என்.எல்.சி நிறுவனத்தைக் கண்டித்து கடந்த 26-ம் தேதி போராட்டம் நடத்தினர். அப்போது கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டன. இதனால் நேற்று வரை காவல்துறையினரின் பாதுகாப்பில் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது.
இந்நிலையில், வளையமாதேவி கிராமத்திலேயே போராட்டம் நடத்த உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். இதையடுத்து போராட்டம் நடத்தப்பட உள்ள நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் உரிய பாதுகாப்பு அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், வளையமாதேவியில் என்.எல்.சியின் விரிவாக்கப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.