தமிழ்நாடு

டிஸ்லெக்சியா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி..! தொடங்கி வைத்த டி.ஜி.பி...!

Malaimurasu Seithigal TV

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ரோட்டரி கிளப் மற்றும் கோல்ட் அமைப்பு உள்ளிட்டவை இணைந்து டிஸ்லெக்சியா என்ற கற்றல் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை டி ஜி பி சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார்.

வாசிப்புக் குறைபாடு ஒரு நோய் அல்ல. அது ஒரு வளர்ச்சிக் (மேம்பாட்டுக்) குறைபாடு. மூளையில் மொழித் திறனுக்கான பகுதிகள் முழுமையான வளர்ச்சி அடையாததால் ஏற்படும் ஒரு குறைபாடு. சொற்களை வாசிப்பதில் இடர்பாடுகள் இருப்பதே டிஸ்லெக்சியாவில் காணப்படும் முதன்மையான பிரச்சினை. வாசிப்புக் குறைபாட்டின் முக்கிய அடையாளங்கள் சொற்களை வாசிக்க சிரமப்படுவதும், பிழையாக வாசிப்பதும், மெதுவாக, தடங்கித் தடங்கி வாசிக்கும் தன்மை. எழுதும்போது ஏற்படும் எழுத்துப் பிழைகள் போன்றவை.

இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை பெற்றோர் அமைப்பினர், ரோட்டரி கிளப் இணைந்து நடத்தியது. இது குறித்து பேசிய டிஸ்லெக்சியா உள்ள பெண்ணின் தாய் மிருதுளா, டிஸ்லெக்சியா கற்றல் குறைபாடு உள்ளவர்கள், மாற்று முறை கற்றல் தன்மை கொண்டவர்கள் பார்ப்பதற்கு நம்மை போன்று தான் இருப்பார்கள். வெளியில் தெரியாத குறைபாடு. அவர்களுக்கு எழுத்து எழுதுவது படிப்பது தான் குறைபாடு மற்றபடி அவர்கள் திறமைசாலிகள் தான் , அவர்களுக்கு ஏற்றவாறு புரியும் வகையில் கற்றுக்கொடுத்து அவர்களுக்கு பிடித்த தொழிலில் இருந்தால் நிச்சயம் நன்கு பணி புரிந்து வெற்றி பெறுவர் என்று தெரிவித்தார்.