தமிழ்நாடு

கனமழை எதிரொலி: அறுவடைக்கு தயாராக இருந்த விளை நிலங்கள் சேதம்!

Tamil Selvi Selvakumar

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, விளை நிலங்கள் முழுவதும்
நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. 

கடந்த இரு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால், வள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கல்படி குளம் நிரம்பி, மறுகால் ஓடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாய நிலங்களில் வெள்ள நீர் புகுந்து 60 ஏக்கரில் பயிரிடப்பட்ட தென்னை, வாழை கன்றுகள், வெள்ளரி பயிர்கள் முழ்கி சேதமடைந்துள்ளன.

இதேபோன்று, நாவல் காடு, ஈசாத்திமங்கலம், பூதப்பாண்டி, அஸ்தீஸ்வரம், மயிலாடி,கொட்டாரம் போன்ற பகுதிகளில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 500 ஏக்கர் நெற்பயிர்கள் கீழே சாய்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு  உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி சப்பாத்து பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். பூவாடி, ஆற்றுவரம்பு ஆகிய கிராமத்திற்கு செல்லும் சப்பாத்து நடை பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆகையால் அப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.