தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அம்மன் கோயில் காடு பகுதியில் நதியின் குறுக்கே கட்டப்பட்ட தரை வழிப்பாலம் அடித்து செல்லப்பட்டது.
அதேசமயம், எடப்பாடியில் உள்ள 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்வதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், வைகை ஆற்றில், நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆற்றில், ஏற்கனவே ஆகாயத்தாமரைகள் நிறைந்து தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், மழை நீருடன் கலந்து அடித்து செல்வதால், துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் மழை நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .எனவே மழைக்கு முன்பாக ஆகாயத்தாமரையை சுத்தம் செய்திருக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி...!
திருவண்ணாமலையில் பெய்து வரும் கனமழையால், சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து மூவாயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. 119 அடி கொள்ளளவு கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது, 116 கன அடி நீர் நிரம்பியுள்ளது. தற்போது, 500 கன அடி வீதம் தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால், அழகாபுரி பகுதியில் வீடுகளை சுற்றிலும் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அத்துடன் விளை நிலங்களிலும் மழை நீர் தேங்கியதால் பயிர்கள் நீரில் மூழ்கின.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் விடிய விடிய பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.