சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாதவ மகா சபை சார்பில் சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் யாதவ மகா சபைத் தலைவர் டாக்டர்.தி. தேவநாதன் யாதவ் எழுதிய "இந்திய விடுதலைப் போரில் வீராங்கனைகள்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நூலினை மீனாட்சி தேவநாதன் யாதவ் வெளியிட அதன் முதல் பிரதியை அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பெற்றுக்கொண்டார்.
கோகுல இந்திரா:
குயிலிக்கு திருஉருவச் சிலை வைத்ததே அதிமுக ஆட்சி காலத்தில் தான் எனவும் "பெண்கள் சீரியல் பார்ப்பதை குறைத்து விட்டு குழந்தைகளுக்கு பெண் விடுதலை போராட்ட வீராங்கனைகள் குறித்த கதைகளை சொல்ல வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
எஸ்.வி.சேகர் :
அவரைத் தொடர்ந்து பேசிய எஸ்.வி.சேகர் பெண்களிடம் ஒரு விஷயம் சொன்னால் காதில் வாங்கி மறுநாள் பக்கத்து வீட்டு பெண்களிடம் சொல்லி விடுவார்கள் எனவும் ஆனால் ஆண்கள் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடுவார்கள் எனவும் பேசியுள்ளார்.
மேலும் பெண்கள் அதிகமாக படிக்கும் நாடு வேகமாக வளரும் எனக் கூறிய அவர் கல்வியை விட ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினால் நாடு மேலும் வளரும் எனத் தெரிவித்துள்ளார்.
தேவநாதன் யாதவ் :
தொடர்ந்து பேசிய தேவநாதன் இந்து மதத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் உள்ளது என சொல்கிறார்கள் எனவும் ஆனால் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஆரம்பித்தே அக்பர் அரசன் தான் எனப் பேசியுள்ளார். மேலும் குயிலி அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் எனக் கூறிய அவர் ஆனால் அருந்ததியர்கள் பிழைக்க வந்தவர்கள் என சிலர் சொல்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நீதிக் கட்சி என்பது ஆங்கிலேயரகளால் ஆரம்பிக்கப்பட்டு இன்று இந்தியர்களை ஏமாற்றும் கட்சியாக உள்ளது எனவும் ஆகவே நீதிக்கட்சி மற்றும் அதன் வழி வந்த கட்சிகளை ஒழித்தால் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சுதந்திரத்திற்கு பிறகு வந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம் அல்ல எனவும் அவை பிரிட்டிஷ்ஷின் அடிமை அரசாங்கம் எனக் கூறிய தேவநாதன் இப்போது உள்ள அரசாங்கம் தான் (மோடி அரசு)மக்களுக்கான அரசாங்கம் எனவும் கூறியுள்ளார். தொடர்ந்து தாஜ்மகால் காதல் சின்னம் அல்ல எனவும் அது சோக சின்னம் எனவும் ஆனால் அதனை அரசாங்கம் காதல் சின்னம் எனக்கூறி மாணவர்களை தவறாக வழி நடத்துகிறது எனவும் பேசியுள்ளார்.
மேலும் திராவிட மாடல் என்பது ஏமாற்று வேலை எனவும் யாரும் பெண்களுக்கு சுதந்திரம் பெற்றுத்தரவில்லை எனவும் பேசியுள்ளார்.
இதையும் படிக்க: பிற மாநிலத்தவர்கள் குறித்த தகவல்கள் சேமிக்க உத்தரவு....!!!