தமிழ்நாடு

" இது கூடவா தெரியவில்லை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தகுதியற்ற அரசின் முதல்வருக்கு..? " - ஸ்ரீதரன்

Malaimurasu Seithigal TV

முதல்வர் கூறிய பச்சைப் பொய்யை ஒரு விவரம் தெரியாத திமுக காரன்தான் நம்புவான்  என தமிழக பாஜக  மாநில செயலாளர் ஸ்ரீதரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டதாவது:-   

"தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதுவரை ஆண்கள் மட்டுமே பயிற்சி பெற்றுவந்த நிலையில், இந்த ஆண்டு முதன்முதலாக மூன்று பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களுக்கு நிறைவு சான்று அளிக்கப்பட்டுள்ளது. 

இதை பெருமையாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் செய்தியில்,"   “பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது.

 ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது திராவிட மாடல் ஆட்சி அகற்றியதில், இப்போது கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...” என்று பதிவிட்டுள்ளார். 

அதாவது முதன்முதலாக பெண்கள் கோவில் கருவறைகளில் இப்போதுதான் நுழையப் போகிறார்கள் என்பது போல தவறான இரு தகவலை ஒரு முதல்வரே பதியலாமா.. இப்படி ஒரு அற்பத்தனமான தம்பட்டத்தை அடித்துக் கொள்ளலாமா..? இது அவரின் அறியாமையை காட்டுவதாக பலர் உதாரணங்களுடன் கூறுகின்றனர்.

பொதுவாக பெண்கள் அர்ச்சகராக வருவதை இந்து மதம் தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . அதை அனுமதிக்காத எந்த வேதமும் இல்லை. உண்மையில், பண்டைய வேத காலங்களில், ஆண்களைப் போலவே பெண்களும் அறிவைப் பின்தொடர்வதில் சம சுதந்திரத்தை அனுபவிப்பதாக அறியப்பட்டுள்ளனர்.

அவர்கள் வேதங்களையும் படித்தார்கள். என்றாலும் அவர்களின் உடல் ரீதியிலான பிரச்சினைகள், துன்பங்கள், குழந்தை பேறு, குழந்தைகள் வளர்ப்பு, குடும்ப நிர்வாகம் போன்ற காரணமாக பெண்கள் ஈடுபட அதிக வாய்ப்புகள் அளிக்கப்பட்டதில்லை. எனவே பாலியல் பாகுபாடுகள் நம் சமயத்தில் இல்லை. அதே சமயம் வாய்ப்புள்ள இடங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

குறிப்பாக கேரளாவில் உள்ள அமிர்தானந்தமயி மடத்தில் உள்ள துர்க்கை கோயிலிலும், ஈஷா யோகா மையத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலிலும் பெண்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் அமிர்தநாமதாமயி மடத்தின் கன்னியாஸ்திரிகள் தலைமை தாங்கி ஹோம குண்டத்துடன் பூஜைகள் செய்கின்றனர் 

கர்நாடக மாநிலத்தில் முதன்முதலாக மங்களுரு அருகே குட்ரோலி என்ற இடத்தில் கோகர் நாத நாதேஸ்வரா கோயிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு லக்ஷ்மி என்ற 65 வயது பெண்ணும் 45 வயது நிரம்பிய சிலிம்பி என்கிற இரு தலித் பெண்கள் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏன் நம்ம ஊரு மேல்மருவத்தூரில் கூட அடிகளார் அவர்கள் உருவாக்கிய ஓம் சக்தி கோவிலில் அனைத்து சாதிப் பெண்களும் கர்ப்பகிரகத்துக்குள் அனுமதிக்கப்படுவதுடன், அவர்களே தங்கள் கைகளால் அம்மனுக்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்கிறார்கள். 

அதேபோல கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள மண்ணரசலாவில் பாரம்பரியமாக எப்போதும் ஒரு பெண் பிராமண பூசாரிதான் கருவறைக்குள் இருந்து சடங்குகள் ஆற்றுகிறார். அகமதாபாத்தில் கூட பார்சி கோவில்கள் பலவற்றில் பெண்கள் பூசாரிகளாக உள்ளனர். 

இதுபோல நூற்றுக்கணக்கான உள்ளூர் கோவில்கள் உதாரணத்துக்கு நிறைய உள்ளன. தமிழகத்தில் கூட ஏராளமான கிராம தேவதை கோவில்களில் பெண்கள் மூலவர் அருகே அமர்ந்து சடங்குகளை செய்துதான் வருகின்றனர். 

பொதுவாக ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகம நெறிகள் தொடக்க காலத்தில் இருந்தே இருக்கிறது. ஆங்காங்கு என்ன வட்டார அடிப்படையிலான வழக்கமோ அது செய்யப்படுகிறது. ஹிந்து மதம் எதையும் இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்துவது இல்லை. இதை எல்லாம் எடுத்துச் சொல்ல நாசமாய்ப் போன இவர்களின் நாத்தீக கூடாரத்தில் யாரும் இல்லை.

இந்நிலையில் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருக்கின்றன என முதல்வர் கூறிய பச்சைப் பொய்யை ஒரு விவரம் தெரியாத திமுக காரன்தான் நம்புவான். மக்கள் நம்பமாட்டார்கள். இந்த விஷயத்தில் மட்டும் இல்லை.. இனி எந்த விஷயத்திலும் பொய்யான தம்பட்டம் அடித்துக் கொள்ளும் உங்களை மக்கள் நம்பப் போவதில்லை என்பதை வரும்காலம் எடுத்துக் கூறும்",

இவ்வாறு தனது அறிக்கையில்   விமர்சித்துள்ளார்.