தமிழ்நாடு

” திமுகவின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது “ - இபிஎஸ் சாடல்.

Malaimurasu Seithigal TV

அட்டவணை பிரிவு மக்களின் பாதுகாவலர் என சொல்லும் திமுக ஆட்சியில் அவர்கள் பல துயரங்களை அனுபவித்துக் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம் ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் 40 வீடுகளுக்கு குடிநீர் வசதி இல்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் அட்டவணை பிரிவு மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால் அதிமுக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என திமுக அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- 

“ஓட்டுக்காக நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள், சமூக நீதியைக் காப்பதே எங்கள் உயிர் மூச்சு, ஆதிதிராவிட மக்களின் சம்பந்தி நாங்கள்” என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டும் பம்மாத்து பேர்வழி ஆட்சியளர்களின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது” என்று சாடினார்.

மேலும் தென்காசி மாவட்டம் வெங்காடம்பட்டி ஊராட்சியில் லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் சுமார் 40 வீடுகளுக்கு குடிநீர் வசதி இல்லை என்றும், குடிநீர் குழாய் இணைப்பு  வழங்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த அதிமுக ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி கே. ஜனதா அவர்களிடம் அப்பகுதி மக்கள் குடிநீர் வசதி வேண்டி முறையிட்ட நிலையில்,  தனது உறுப்பினர் நிதியிலிருந்து அவர் 5.10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பைப்  லைன்கள் அமைத்து பல மாதங்கள் ஆன நிலையில், திமுகவைச் சேர்ந்த ஒன்றியக்குழுத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவரும் சேர்ந்து திட்டமிட்டு பல்வேறு காரணங்களைக் கூறி இன்னும் அந்த பகுதி மக்களுக்கு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றும், மேலும் வெங்கடாம்பட்டி ஊராட்சியில், குடிநீர் திற்ந்துவிடாததற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அவலமும் நடந்தேறியதாக குற்றம்சாட்டினார். 

இந்த அவலங்களைப் பற்றி திமுகவின்  கூட்டணியில் அங்கம் வகிக்கும் பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என கூறிக்கொள்பவர்களும், அனைவரும் சமம் என பேசும் பொதுவுடைமைவாதிகளும் வாய்மூடி மவுனமாக இருப்பது விந்தையாக உள்ளது என்றும் தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு  இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால் அதிமுக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்று விடியா திமுக அரசை எச்சரிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.