மணிப்பூர் கலவரம் மற்றும் பழங்குடியினப் பெண்களுக்கு எதிரான கொடூரத்தைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய அவர், இது கிறிஸ்துவர்களுக்கு எதிரான மதக் கலவரம் என்றும், கலவரத்திற்கு காரணமான பா.ஜ.க. அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் பேசினார். தொடர்ந்து, பா.ஜ.க.வுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதே போன்று, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்குடியின பெண்களுக்கு எதிரான கொடூரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யத் தவறிய பா.ஜ.க. அரசு, வீடியோ வெளியிட்ட நிறுவனங்களை மிரட்டும் வேலையில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறி, பா.ஜ.க. அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்.
நாமக்கல் மோகனூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக, கிழக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மகளிர் அணி நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று மணிப்பூர் கலலவரத்தை தடுக்கத் தவறிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட அனைத்து மகளிர் திமுகவினர் பங்கேற்று மணிப்பூர் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, பா.ஜ.க. அரசு பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.