தமிழ்நாடு

பொய்யான செய்திகளை பரப்பி வரும் திமுக அரசு...அடுக்கடுக்காக குற்றம் சுமத்திய ஈபிஎஸ்!

Tamil Selvi Selvakumar

முகலிவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிடவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

தீவிரம் அடையும் வடகிழக்கு பருவமழை:

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் மழையின் அளவு தீவிரம் அடைந்து வருகிறது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகவே கனமழையானது வெளுத்து வாங்கி வருகிறது. அதுவும் சென்னையில் அதிகாலையில் தொடங்கி, இரவு வரை கனமழையானது பொழிந்து வருகிறது. 

வடியாத மழைநீர்:

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சென்னை அடுத்த போரூர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசு இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டாலும், பல இடங்களில் இன்றளவும் மழைநீரானது தேங்கியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு:

இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வின் இடைக்கால  பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முழங்கால் அளவிற்கு  தேங்கி நிற்கும் மழை நீரில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், போர்வை, புடவை, பால் பாக்கெட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார். 

பொய்யான செய்தியை பரப்பி வரும் திமுக அரசு:

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் படகில் வந்தார்கள் என்று குற்றம் சாட்டினார்கள்; ஆனால், இன்று படகுகளில் மீட்கப்படும் காட்சியை நீங்களே பார்க்கிறீர்கள் என்று கூறிய அவர், சென்னையில் ஆங்காங்கே குளம்போல் மழைநீர் தேங்கியிருப்பதாக கூறினார். ஆனால் திமுக அரசு எங்கும் மழைநீர் தேங்கவில்லை என்ற செய்தியை பரப்பி வருகிறது. அதுமட்டுமல்லாமல், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதிகள் செய்யப்பட்டதன் மூலம், வெள்ளநீர் வடிந்ததாக திமுக அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

மாநில அரசை வலியுறுத்திய ஈபிஎஸ்:

தொடர்ந்து பேசிய அவர், மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்க்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் என எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தார். எனவே, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதலமைச்சர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கைகளையும் நிவாரண உதவிகளையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னதாக, பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தவதற்காக இன்று சீர்காழி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் எங்களுக்கு தேவையில்லை என்று கூறியது குறிப்பிட்டத்தக்கது.