தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்...!

Tamil Selvi Selvakumar

புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக இன்று முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.

தமிழ்நாடு பொருளாதாரத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வருமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்து, அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். 

அதன் தொடர்ச்சியாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளுக்காக அரசை அணுகியதோடு, தொழில் விரிவாக்கம் தொடர்பாகவும், பல நிறுவனங்கள் தொழில்துறையுடன் பேசி வருகின்றன. இதுதவிர, தமிழ்நாட்டில் வரும் செப்டம்பா் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய தொழில் திட்டங்கள், கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது.

இக்கூட்டத்தில், தற்போது புழல் சிறை மருத்துவமனையில் உள்ள இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜி தவிர்த்து மற்றவர்கள் பங்கேற்கவுள்ளனா். இதில், தொழில் முதலீடு, அரசு திட்டங்களோடு அரசியல் ரீதியாக, அமைச்சர்கள் மீது நடத்தப்படும் அமலாக்கத் துறை நடவடிக்கைகளை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.