தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து பிற பகுதிகளுக்கு 2-ஆம் நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வரும் 12-ம் தேதி தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயங்க தொடங்கின.
சென்னையில், மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களை இணைக்கும் வகையில் கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தொடர் விடுமுறையொட்டி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்கள் உள்ளிட்டோர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். பயணிகளின் வசதிக்காக இன்று 4 ஆயிரத்து 675 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக 20 தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இதுவரை 2.30 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையே பயணிகள் சொந்த ஊர் திரும்பும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.