திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பழையங்குடி கிராமத்தில் குறுவை சாகுபடிக்கான இயந்திர நேரடி விதைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், இயந்திரம் மூலம் நேரடி விதைப்பு பணியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டு, குறுவை பருவத்தில் 97 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதுவரை நேரடி நெல் விதைப்பு, திருந்திய நெல் சாகுபடி மற்றும் இயல்பான நடவு மூலம் 37 ஆயிரத்து 510 ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும், 59 ஆயிரத்து, 490 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என்றும் கூறினார்.