கோவையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் கோவையில் தொண்டாமுத்தூர், செங்குபதி மலைவாழ் கிராமம், சோமையம்பளையம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், ஆர்.எஸ். புரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெண்கள் விடுதி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குழு ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட செல்வபெருந்தகை பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, கோவை மலை கிராமம் வேளாண் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டதாகவும் அரசு ஊழியர்களிடம் குறையைக் கேட்டு தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.
மேலும், மலை கிராமங்களில் வாழும் பழங்குடியின மக்கள் காட்டு விலங்குகளால் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், நடமாடும் ரேஷன் கடைகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் எனவும், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக உடனடியாக வழித்தடம் இல்லாத கிராமங்களுக்கு வழித்தடம் அமைத்து பேருந்து சேவை தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.