தமிழ்நாடு

ED-யின் ஆவணங்களை கேட்டு தாக்கல் செய்த மனுவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Tamil Selvi Selvakumar

செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கடந்த ஏழாம் தேதி முதல் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

ஐந்து நாட்கள் காவல் முடிந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது, அமலாக்கத்துறை தரப்பில் மூன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் டிரங்க் பெட்டியில் தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்து கடந்த 12ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கதுறையினர் தாக்கல் செய்த வழக்கு ஆவணங்களான குற்றப்பத்திரிகை, கைது குறிப்பானை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் முழுமையாக வழங்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாாித்த நீதிமன்றம், அமலாக்கதுறையினர் தாக்கல் செய்த வழக்கு ஆவணங்களை வழங்கக்கோரி முறையிட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.