தமிழ்நாடு

மக்களுக்காக அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்...வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாரா?

Tamil Selvi Selvakumar

மக்கள் மீது அக்கறை இருப்பது போல அறிக்கை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி மழை நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளாரா என அமைச்சர் சேகர்பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம்:

வடகிழக்கு பருவமழை கடந்த 3 மூன்று நாட்களாக தமிழகத்தில் கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழையால் சென்னையில் அதிக பாதிப்புக்கு உள்ளான திருவிக நகர் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை மாநகர மேயர் பிரியா, திரு வி க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

95 சதவீதம் மழைநீர் வெளியேற்றம்:

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு, பருவமழையால் தேங்கி இருந்த மழைநீர் 95 சதவீதம் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், மழையால் ஏற்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து, கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக மழைநீர் நின்ற இடங்களில் எல்லாம், தற்போது ஒரு சொட்டு மழைநீர் கூட இல்லை என்று கூறினார். 

மழை நிவாரணப்பணிகளில் ஈபிஎஸ் ஈடுபட்டாரா?:

இதைத்தொடர்ந்து பேசிய அவர், மக்கள் மீது அக்கறை இருப்பதுபோல அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இதுவரை எங்கேயாவது மழை நிவாரணப்பணிகளில் ஈடுபட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குறை கூறி வந்தாலும், எங்கள் பணி எப்போதும் போல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.