தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் தம்பியை லண்டனில் ரகசியமாக சந்தித்தாரா அண்ணாமலை?

Malaimurasu Seithigal TV

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை லண்டனில் ரகசியமாக சந்தித்தீர்களா என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை 6 நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு சென்னை திரும்பினார். அவருக்கு தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை,  இங்கிலாந்து முழுவதுமே இந்திய பிரதமர் மோடியின் ஆட்சியை குறித்து பேசுகிறார்கள். இந்தியாவின் வளர்ச்சி, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி மாறப்போகிறது என்பது குறித்து தான் அதிகம் பேசுகின்றனர். இதனை ஒரு இந்தியனாக ஒரு தமிழனாக கேட்பதற்கு பெரும் பூரிப்பு. மகிழ்ச்சி என தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து சென்ற தமிழர்களும், தமிழ்நாட்டில் இருந்து சென்ற தமிழர்களும் சைவ கோவில்களை கட்டி வழிபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், அந்த கோவில்களுக்கும் மற்றும் பர்மிங்காம்மில் உள்ள மிகப்பெரிய பெருமாள் கோவிலுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது என்றும் இதனை பார்க்கும் போது சனாதன தர்மம் கடல் தாண்டி விரிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்திய பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்ததற்கும், சைவ ஆதினங்களுக்கு பிரதமர் கொடுத்த மரியாதை, கலாச்சார அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி இந்த மூன்றையும் பாராட்டி லண்டனில் உள்ள கோவில்கள் கூட்டமைப்பு அறங்காவலர்கள் பிரதமருக்கு பாராட்டு பத்திரம் கொடுத்தாகவும், அதனை பிரதமரிடம் நேரில் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் இருக்கக் கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதாக குறிப்பட்ட அண்ணாமலை, 70 ஆண்டுகளாக இது நடைமுறையில் உள்ளதாகவும், திமுக அரசு சிதம்பரம் கோயிலினை ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து செய்திகளில் வைத்துக்கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் சிதம்பரம் கோவிலுக்கு செல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அவர்களுக்கு எந்த வகையான உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது எனக் கூறிய அவர், தமிழ்நாட்டில் உள்ள பல கோயில்களில் பல பிரச்சினைகள் உள்ளதாகவும் அவற்றை தவிர்த்துவிட்டு புதிய பிரச்சனைகளை உருவாக்குவதே திமுக அரசின் வாடிக்கையாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து லண்டனில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை ரகசியமாக சந்தித்தீர்களா? என  செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் கோவமுற்ற பாஜக தலைவர் அண்ணாமலை உங்களுக்க இந்த தகவலை யார் அளித்தது என செய்தியாளர்களை நோக்கி எதிர்கேள்வி எழுப்பினார். தொடர்ச்சியாக செய்தியாளரை நோக்கி கேள்வி எழுப்பிய அண்ணாமலை, முட்டாள் தனமாக கேள்வி கேட்காதீர்கள் என செய்தியாளர்களை சாடினார்.