தமிழ்நாடு

தேசத்தின் வளர்ச்சிக்கு...இதன் வளர்ச்சி மிக முக்கியமானது...முதலமைச்சர் பேச்சு!

Tamil Selvi Selvakumar

தேசத்தின் வளர்ச்சிக்கு, கிராமப்புறங்களின் வளர்ச்சி மிக முக்கியமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

ஊராட்சித்துறை கண்காணிப்பு குழுக் கூட்டம்:

சென்னை தலைமைச் செயலகத்தில், ஊராட்சித்துறை கண்காணிப்பு குழுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில், ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமப்புற திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்களால், சுமார் மூவாயிரத்து 43 ஊரக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறிய முதலமைச்சர், ஊரகப் பகுதிகளில் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்:

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் அமலில் உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள், செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்கப்படுவதாகவும் கூறிய முதலமைச்சர், பொதுமக்களுக்கு சமமான, தரமான மருத்துவ சேவை வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

நியாய விலைக் கடைகளின் தரம் உயர்த்த நடவடிக்கை:

மேலும், தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளின் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எந்த திட்டமாக இருந்தாலும் கடைகோடி மக்களை சென்றடைய வேண்டுமென்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் குறிப்பிட்டார்.